NATIONAL

நிலத்தடியிலுள்ள அடிப்படை வசதிகளை வரைபடமிடும் பணிகளுக்காக கூசெல் முறை உருவாக்கம் – மந்திரி புசார்

ஷா ஆலம், ஆக. 26 – நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை
வரைபடமிடும் நடவடிக்கையை ஒங்கிணைக்கும் மற்றும் முறைப்படுத்தும்
நோக்கத்திற்காக யுட்டிலிட்டி காரிடோர் (கூசெல்) எனும் முறையை
சிலாங்கூர் அரசு உருவாக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்ட அமலாக்கம் பெரும் செலவினத்தை உள்ளடக்கியதாக இருந்த
போதிலும் இப்பணியை மேற்கொள்ளும் பொறுப்பினை ஏற்றுள்ள அந்த
அமைப்பு, விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்ப்பதற்கு ஏதுவாக நிலத்தடி
அடிப்படை வசதிகள் தொடர்பான பதிவு மற்றும் ஏற்பாடுகளைக்
கவனிக்கும் என்று அவர் சொன்னார்.

கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் போது நிலத்தடியில்
பதிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை இட மாற்றம் செய்வதற்கு பெரும்
தொகையை செலவிட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்குச் சில
சமயங்களில் ஏற்படுகிறது. சில வேளைகளில் இந்த செலவினம் நான்கு
முதல் ஐந்து மடங்கு வரை அதிகரித்து விடுகிறது.

இந்த கூசெல் முறையின் வாயிலாக ஏற்பாடுகளை முன்கூட்டியே
கவனிக்க முடியும். திட்டமிடப்பட்ட திட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட
காலத்திற்கு முடிக்க இயலும் என்பதோடு செவினங்களையும் மிச்சப்படுத்த
இயலும் என்றார் அவர்.

அண்மையில் தலைநகர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட மண்
அமிழ்வு சம்பவத்தின் எதிரொலியாக நிலத்தடி அடிப்படை வசதிகளை
வரைபடமிடுவதில் மாநில அரசின் ஏற்பாடுகள் குறித்து கருத்துரைத்த
போது அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்த அந்த எதிர்பாரா சம்பவம் நாம்
மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை
அனைவருக்கும் உணர்த்துகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.22 மணியவில் ஜாலான் மஸ்ஜிட்
இந்தியாவில் திடீரென ஏற்பட்ட மண் அமிழ்வில் இந்திய
சுற்றுப்பயணியான விஜயலட்சுமி (வயது 48) சிக்கி சுமார் 8 மீட்டர்
ஆழமுள்ள குழியில் விழுந்தார். காணாமல் போன அவரை தேடும் பணி
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :