NATIONAL

மஸ்ஜித் இந்தியா நில உள்வாங்குதலின் பின் மலாயன் மேன்சன் குடியிருப்பாளர்களின் அச்சம் 

கோலாலம்பூர், ஆக. 26 – இங்குள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில உள்வாங்குதல் ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் ஐம்பது மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலாயன் மேன்சன் அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் சுமார் 160 குடியிருப்பாளர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக உறக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் அண்மைய சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை அப்பகுதியில் நிலக் கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சமும் அவர்களை வாட்டுகிறது.

 குடியிருப்புகளை காலி செய்யக் கோரும் எந்த உத்தரவையும் தாங்கள் அதிகாரிகளிடமிருந்து இதுவரை பெறவில்லை என்று மலாயன் மேன்சனில் குடியிருந்து வரும் சுராயா ஷகிலா அப்துல்லா (வயது 57) கூறினார்.

மண் உள்வாங்கும் சம்பவம் ஒரே இடத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது தங்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தினாலும் இந்த பகுதி பாதுகாப்பானது எனக் கருதுவதால் வேறு இடத்திற்கு குடிபெயரும் திட்டம் தமக்கில்லை என்று அவர் சொன்னார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இதே போன்ற மண் உள்வாங்குதல் சம்பவம் இன்னும் எனது மனதில் நிழலாடுகிறது. அச் சம்பவத்திற்குப் பின்னர் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்று கடந்த 30 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் அம்மாது குறிப்பிட்டார்.

எட்டு மாடிகளைக் கொண்ட மலாயன் மேன்சனில் சுமார் 800 குடியிருப்பாளர்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டினராவர்.

இதனிடையே, இந்த இடம் பாதுகாப்பானதாகத் தாம் கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணம் தமக்கில்லை என்று கடந்த ஓராண்டு காலமாக இங்கு வசித்து வரும் விண்டா (வயது 48) கூறினார்.

இந்த பகுதி பாதுகாப்பானது எனத் தாம் கருதுவதோடு மண் உள்வாங்குதலில் காணாமல் போன மாது காப்பாற்றப்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :