NATIONAL

தேசிய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளியன்று பிரதமர் சிறப்புரையாற்றுவார்

கோலாலம்பூர், ஆக. 26 – இவ்வாண்டு 67வது தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (பி.ஐ.சி.சி.) வரும் வெள்ளிக்கிழமை சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வு மலேசியர்களிடையே குறிப்பாக புதிய தலைமுறையினரிடையே குதூகலத்தை  ஊக்குவிப்பதையும் ஆழமான சுதந்திர உணர்வைப் போற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் பிரிவுச் செயலாளர் (சமூக மேம்பாடு) ஜைமி ஷாரி கூறினார்.

இவ்வாண்டிற்கான தேசிய தின நிகழ்வு , கடந்தாண்டின் பிரதமரின் உரையை அடிப்படையாகக் கொண்டது. இது சுதந்திரமான சிந்தனையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த  தலைமுறை சுதந்திரம் பெற்றத் தருணத்தை  நேரடியாக அனுபவிக்கவில்லை. எனவே அதை எவ்வாறு சரியாகக் கொண்டாடுவது?

ஆகவே, இவ்வாண்டு சுதந்திரத்தின் உணர்வை  அனைவரும்  புரிந்துகொள்வதை உறுதிசெய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம். பல இன, சமய மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மலேசியர்களாகிய நாம் தற்போதைய தலைமுறையின் சூழலில் சுதந்திர கோட்பாட்டை  நிறைவேற்றுவதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த நிகழ்வில் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

இன்று பெர்னாமா தொலைக்காட்சியின் ‘அப்பா காபார் மலேசியா’ நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திர விழாவை குதூகலப்படுத்தவும் இவ்வாண்டு தேசிய தினத்திற்கான பிரதமரின் செய்தியைக் கேட்கவும் பொதுமக்களை அழைக்கிறோம் என்று ஜைமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாகக் காணலாம் என்றார் அவர்.


Pengarang :