NATIONAL

நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை இல்லை – ஆண்டு இறுதி வரை போதுமான கையிருப்பு உள்ளது

புத்ராஜெயா, ஆக 26 – மலேசியா  இன்சுலின் பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை என்பதோடு தற்போதையக் கையிருப்பு  ஆண்டு இறுதி வரைக்கும் போதுமானது என்று சுகாதார அமைச்சு  இன்று உறுதிப்படுத்தியது.

புதிய விநியோகிப்பாளர்களை விரைந்து கண்டறியும் முயற்சியில் அமைச்சு ஈடுபட்டுள்ள அதேவேளையில் மற்ற மாற்று வழிகளையும்  அது ஆராயத் தொடங்கிவிட்டது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் கூறினார்.

நாம் நெருக்கடியை எதிர்நோக்குவோம் என்று நான் நம்பவில்லை. எங்களிடம் வேறு மாற்று வழிகள் உள்ளன. விரைவில் மற்றொரு விநியோகிப்பாளரைக் கண்டுபிடிப்போம் என்று  இன்று  இங்கு நடைபெற்ற  எம்.ஐ.எச். மெகாடிரேண்டஸ்  2024 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் ஊடகங்களிடம்  அவர் கூறினார்.

மலேசியா எவ்வளவு நாட்களில் இன்சுலின் விநியோகத்தைப் பெற முடியும் என நிருபர்கள் கேட்டதற்கு, முன்பு பல மாதங்கள்  அல்லது அடிக்கடி காத்திருந்த சூழலுடன் ஒப்பிடுகையில், 60 நாட்களுக்குள் நாங்கள் அதை விரைவுபடுத்துவோம் அவர் பதிலளித்தார்.

சமீபத்தில் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் மனிதர்களுக்கான இன்சுலின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதற்கு  உற்பத்தி சிக்கல் காரணமாக இருந்ததாகக் கடந்த வாரம் சுகாதார அமைச்சு கூறியிருந்தது.

மேலும் நோயாளிகளுக்கான சிகிச்சையில் தடங்கல் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் அனலாக் இன்சுலின் மற்றும் வாய்வழி மருந்துகளை வழங்கும் சிகிச்சையை அதிகரிப்பது  உள்பட பல நடவடிக்கைகளை அமைச்சு செயல்படுத்தியது.


Pengarang :