NATIONAL

கல்வி கற்க தடையா? குடிநுழைவு இலாகா அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும்!!!

பினாங்கு, ஜனவரி 16:

குடியுரிமை இல்லாதவர்கள் இந்நாட்டில் கல்வியை தொடர்வதற்கு கடப்பிதழை கொண்டிருக்க வேண்டும் என குடிநுழைவு இலாகா கூறியிருப்பது அவசியமற்றது என கெஅடிலான் கட்சியின் குடியுரிமை விவகார நடவடிக்கை பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறினார்.

நாட்டில் குடியுரிமை இல்லாத மாணவர் கல்வி கற்க கடப்பிதழை கொண்டிருக்க வேண்டும் என கல்வி இலாகாவிற்கு குடிநுழைவு இலாகா அறிக்கை அனுப்பியிருப்பது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார். கல்வி இலாகாவிற்கு அனுப்பிய அறிக்கையை குடிநுழைவு இலாகா மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையேல்,இதனை சட்டரீதியில் முன்னெடுப்போம் என்றும் கூறினார்.இது தொடர்பில் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம் என்றார்.

குடிநுழைவு இலாகாவின் அறிக்கை அறிவுக்கு எட்டாதவை.கல்வி இலாகாவிற்கும் குடிநுழைவு இலாகாவிற்கும் என்ன தொடர்பு எனவும் வினவிய அவர் கடந்த 28 டிசம்பர் 2017இல் குடிநுழைவு இலாகா அனைத்து மாநில கல்வி இலாகாவிற்கும் இது தொடர்பில் அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால்,குடியுரிமை சிக்கலையும் பிரச்னையையும் எதிர்நோக்கி வரும் ஆயிரம் கணக்கான மாணவர்கள் கல்வியை தொடர முடியாமலும் பள்ளிக்கூடத்தில் பதிவு செய்ய முடியாமலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,இன்று காலை 7 முதல் 12 வயது வரையிலான ஏழு மாணவர்களை தாம் அழைத்து சென்றதாகவும் குடிநுழைவு இலாகாவின் அறிக்கையால் அவர்கள் கல்வியை தொடர முடியாமல் போனதாகவும் கூறிய குமரேசன் இதில் இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வு எழுத வேண்டிய 12வயது மாணவியும் ஒருவர் என்றார்.
குடிநுழைவு இலாகாவின் அறிக்கையால் இம்மாணவர்கள் கல்வியை தொடர பள்ளி நிர்வாகம் கடப்பிதழ் கேட்டு,இல்லாத பட்சத்தில் கல்வியை தொடர தடை விதித்ததாகவும் கூறிய அவர் ஒருவரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வியை தொடர தடை விதிப்பது மனித உரிமை மீறல் என்றும் அவர் சாடினார்.

இது தொடர்பில் பினாங்கு மாநில கல்வி இலாகாவுடன் கலந்தாலோசித்த போது எங்களால் இதில் எதுவும் செய்ய இயலாது என்று அவ்விலாகா கை விரித்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.இதில் குடிநுழைவு இலாகா அவர்களின் கட்டுப்பாட்டுக்கு மீறிய நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கியது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இந்நாட்டில் பிறந்து குடியுரிமை சிக்கலையும் பிரச்னையையும் எதிர்நோக்கி இருக்கும் இம்மாணவர்களை அந்நிய நாட்டு குடியேறிகள் போல் வகைப்படுத்தி இன்னல் கொடுப்பது வேதனையானது என்று நினைவுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் குடிநுழைவு இலாகா தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்கவும் இவ்விவகாரத்தில் நல்லதொரு முடிவு கிடைப்பதற்கும் நீதி மன்றத்தை நாடுவதே விவேகம் என்றும் கருதுகிறோம்.இம்மாணவர்கள் மீண்டும் தங்களின் கல்வி பயணத்தை தொடர நாங்கள் எல்லா வகையிலான போராட்டத்தையும் முன்னெடுப்போம் என்றும் குமரேசன் தெரிவித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :