NATIONAL

தேர்தல் ஆணையம்:கெஅடிலான் சின்னம் பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை?

ஷா ஆலம், ஏப்ரல் 20:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கெஅடிலான் கட்சியின் சின்னத்தை பயன்படுத்தும் நடவடிக்கையில் மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு (எஸ்பிஆர்) எந்த ஆட்சேபனை இல்லை என்ற அறிவிப்பை பாக்காத்தான் வரவேற்கிறது என்று கெஅடிலான் கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குனர் பாஃமி பாஃசில் தெரிவித்தார். 14-வது பொதுத் தேர்தலில் எல்லா பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர்களும் கெஅடிலான் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

”  நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமித்த சிந்தனையோடு களம் இறங்கும். கெஅடிலான் கட்சி, அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்களிக்கும் மையத்தை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. வெளியூர்களில் வேலை செய்யும் வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும். நமது நாட்டை காப்பாற்றவும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும்,” என்று தமது அறிக்கையில் பாஃமி  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

இதற்கு முன்பு எஸ்பிஆரின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் கெஅடிலான் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இது குறித்து முடிவு எடுக்க வேண்டியது கெஅடிலான் கட்சியே என்று அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :