SELANGOR

நில அந்தஸ்தை மாற்ற கட்டணங்களைச் செலுத்துங்கள்! தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நினைவுறுத்தல்

காஜாங், ஜனவரி 2:

காஜாங், கம்போங் பாரு குவான் துங்கில் உள்ள அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்களும் தங்கள் தொழிற்சாலைகள் அமைந்துள்ள விவசாய நிலங்களை தொழில்துறை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைக்கு ஏதுவாக அவரவரின் நிலத்துக்கான பிரிமியம் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சில தொழிற்சாலை உரிமையாளர்கள் இக்கட்டணங்களைச் செலுத்த மறுத்து வருவதால் நிலப்பட்டாக்களின் அந்தஸ்தை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியுவ் கி தெரிவித்தார்.
இந்தக் கட்டணத்தைச் செலுத்த அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தால், இந்த நிலங்கள் மீதான உரிமையை அவர்கள் இழக்க நேரிடும்.
மேலும், கட்டணம் செலுத்த இணங்கும் உரிமையாளர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் நினைவுறுத்தினார்.

இந்த நிலங்களின் அந்தஸ்து உடனடியாக மாற்றப்படாவிடில், பேரிடர் ஏதும் நிகழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.
இந்த கம்போங் பாரு குவான் துங் பகுதியில் சுமார் 80 தொழிற்சாலைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இந்த விவகாரம் வெகு காலமாக தீர்வு காணப்படாமல் இருக்கின்றது. இதற்கு விரைவில் தீர்வு காணுமாறு மாநில அரசாங்கத்திற்கு தாம் கடிதம் எழுதப் போவதாக அவர் சொன்னார்.


Pengarang :