NATIONAL

நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் தீபாவளி வாழ்த்து செய்தி

புத்ராஜெயா, அக்டோபர் 26:

நீதியின் வெற்றியை உலகுக்குப் புகட்டும் ஒரே பெருநாள் தீபாவளியே, அந்நாளில் நம் நல்வாழ்வுக்கு உறுதி எடுப்போம்.

மலேசியாவில் தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகப் பண்டிகைகளில் அதர்மத்திற்கு எதிரான போராட்டத்தில் நீதியின், தர்மத்தின் வெற்றியைக் கொண்டாடும் ஒரே பெருநாள் தீபாவளியே ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடும் பொழுது மட்டுமன்றி, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நன்னெறிகளை நமக்கு நினைவு படுத்தும் மிக உன்னதப் பண்டிகையாக விளங்கும் தீபாவளியை நாம் ஒற்றுமையாக, ஆனந்தமாகக் குடும்பத்துடனும் சுற்றத்தாருடனும் ஒன்றுபட்டுப் புதிய இலட்சியங்களோடு கொண்டாடுவோம்.

உலகில் முந்திய குடி மூத்த குடி என்று பெயர் பெற்றவர்கள் நாம், ஆக நமது பண்டிகைகளின் வழி மக்களுக்கு உணர்த்தும் நீதிகளுக்கும், முதியவர்களை மதிக்கும் பண்பாடும், இயற்கையை நேசிக்கும் கலாச்சாரமும் தொடர்ந்து பேணப்பட வேண்டும். நாட்டில் மற்றவர்களுக்கு நாம் முன் உதாரணமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணங்களுடன் நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். தீபாவளி நாள் மட்டுமின்றி நம் எதிர்காலத்தையே ஒளிரச் செய்வதே, அவர்களுக்கு நாம் வழங்கும் சிறந்த தீபாவளி பரிசாகும்.

கடந்த நூற்றாண்டிலிருந்து சிறுக-சிறுக மாறிவரும் உலக மக்களின் வாழ்க்கை முறையுடன் சேர்ந்து நாமும் பல நல்லவற்றை மறந்து வழி தடுமாறியதால் இன்று பல இன்னல்களை உலகமே சந்திக்க வேண்டியுள்ளது, இயற்கையின் சீற்றத்துக்கு உள்ளாகி மக்கள் பெரிய உயிர் உடமை இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.

நாம் இயற்கையுடன் கூடி வாழ இந்தத் தீபாவளி நாளில் உறுதி எடுப்போம், அமைதியான பூமி, .தூய்மையான நீர், காற்று நல்ல ஆகாரம், சுகமான வாழ்வு எல்லா மக்களுக்கும் தொடர்ந்து கிட்ட ஆவணச் செய்வோம். இயற்கையை நேசித்து, மற்ற உயிரினங்களும் செழித்து வாழும் பூமியாக நம் நாடும் மலரட்டும், ஓங்கட்டும் மக்கள் வாழ்வு, ஒளிரட்டும் நாடு, மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

 

மாண்புமிகு டாக்டர் சேவியர் ஜெயகுமார்

நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சர்


Pengarang :