NATIONAL

பேங்க் நெகாரா கட்டுப்படி வீடமைப்பு கடனுதவி நிதி: ரிம.596 மில்லியன் அங்கீகரிப்பட்டது

கோலாலம்பூர், நவ.26-

பேங்க் நெகாராவின் கட்டுப்படி வீடமைப்பு கடனுதவி நிதிக்கு விண்ணப்பிக்கப்பட்ட 3,100 விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 596 மில்லியன் ரிங்கிட் என நிதியமைச்சர் லின் குவான் எங் தெரிவித்தார்.

வீடுகளை வாங்வோருக்கு உதவும் நோக்கத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் கட்டுப்படி வீடமைப்பு நிதியை பேங்க் நெகாராவும் நிதிக் கழகங்களும் தொடங்கின என்று அவர் சொன்னார். இந்நிதியைப் பெறுவதற்கான தகுதிகள் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

கடனுதவிக்கு விண்ணப்பிப்போரின் குடும்ப வருமான 4,360 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதோடு வீடுகளின் கூடுதல் பட்ச மதிப்பும் 300,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது என்ற அவர் விவரித்தார்.
கட்டுப்படி வீடுகளை வாங்க முற்படும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவும் பேங்க் நெகாராவின் நடவடிக்கையின் அடைவு நிலை குறித்து அறிய விரும்பிய பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் அப்துல் கரீம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் குவான் எங் மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.


Pengarang :