Residensi PR1MA Alam Damai. Foto Faceb
NATIONAL

சக்திக்கேற்ற வீடமைப்பு திட்டங்களையும் ஒருங்கிணைக்க தேசிய வீடமைப்பு கழகம் !!!

புத்ரா ஜெயா, ஜன.7-

பிரிமா வீடுகள் உட்பட கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு திட்டங்களையும் ஒருங்கிணைக்க தேசிய வீடமைப்பு கழகம் (என்எச்சி) அமைக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட திட்டங்களை ஒருங்கிணைக்க என்எச்சி சிங்கப்பூர் வீடமைப்பு மேம்பாட்டு வாரியத்தின்(எச்டிபி) மாதிரியைப் பயன்படுத்தும்  என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“இந்த அமைச்சுக்குப் பொறுப்பேற்ற பின்னர் நான் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பிரதிநிதியுடன் சந்திப்பு நடத்தினேன். வாங்கும் சக்திக்கேற்ற வீடமைப்பு திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இலக்கை நோக்கி நாங்கள் செல்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் ஜூரைடா.

“எச்டிபி வழி சிங்கப்பூரைப் போல் 100 விழுக்காட்டை நம்மால் அமல்படுத்த முடியாது. காரணம் உள்நாட்டு சந்தையைப் பூர்த்தி செய்வதற்கு மலேசியாவிற்கென தனி வழிமுறை உண்டு” என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர் விவரித்தார்.

கடந்த 2018 ஜூலை தொடங்கி 2019 டிசம்பர் 31 ஆம் தேதி வரை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை சுமார் 200,000 வீடுகளை நிர்மாணித்து மற்றும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதையும்  அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மொத்தம் 183,021 வீடுகளில் 20,884 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட வேளையில் 73,701 வீடுகள் கட்டுமானத்திலும்,88,436 வீடுகள்  திட்டமிடப்பட்டும் வருகின்றன.

68,829 வீடுகள் தேசிய வீடமைப்பு நிறுவன திட்டத்தின் (எஸ்பிஎன்பி) வாயிலாகவும், 27,605 வீடுகள் ரூமா மலேசியா வாயிலாகவும் 37,884 வீடுகள் மலேசிய அரசாங்க ஊழியர் வீடமைப்பு திட்டத்தின் வாயிலாகவும் 4,448 வீடுகள் இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் வாயிலாகவும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் சொன்னார்.

இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது பக்காத்தான் கொள்கை அறிக்கையின்படி இன்னும் 10 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளை அமைக்க அமைச்சு இலக்கு கொண்டிருப்பதாக ஜூரைடா குறிப்பிட்டார்.


Pengarang :