NATIONAL

அதிரடி அமலாக்க சோதனை : ரிம. 1 லட்சம் மதிப்பிலான இஸ்திரி பெட்டி, கைக்கடிகாரங்கள் பறிமுதல்!

கோலாலம்பூர், மார்ச் 4-

இங்குள்ள ஜாலான் ராஜா லாவூட்டில் உள்ள கடையொன்றில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் போலி வணிக முத்திரைகளைக் கொண்டிருந்த 2,274 கைக்கடிகாரங்களும் இஸ்திரி பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

எட்டு அமலாக்க அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பிலிப்ஸ் முத்திரையைக் கொண்டிருந்த இஸ்திரி பெட்டிகளும் ஜி-ஷாக் எனும் முத்திடையைக் கொண்டிருந்த கைக்கடிகாரங்களும் போலியானவை என்று சந்தேகித்ததால், சுமார் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தலைமை அமலாக்க அதிகாரி அஸ்மீன் நசுரி தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட இஸ்திரி பெட்டிகளில் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படாததோடு உத்தரவாத குறியீடும் சிரிம் சான்றிதழும் காணப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். சம்பந்தப்பட்ட இஸ்திரி பெட்டிகளும் கைக்கடிகாரங்களும் 30 ரிங்கிட் முதல் 50 ரிங்கிட் வரையிலான விலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் விற்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

மேலும் இந்நடவடிக்கையின் போது இக்கடையின் நிர்வாகி மற்றும் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்த 21 வயது முதல் 36 வயது வரையிலான 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஐவர் பாக்கிஸ்தானியர் என்றும் எஞ்சிய இருவர் வங்காளதேசிகள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.


Pengarang :