NATIONAL

மலேசியாவை ஊழலற்ற நாடாக்க சிறந்த சேவையை வழங்குவேன்! – எஸ்பிஆர்எம் புதிய ஆணையர் உறுதி

கோலாலம்பூர், மார்ச் 10:

ஊழலற்ற நாடாக மலேசியா திகழ்வதை உறுதி செய்ய சிறந்த சேவையை தாம் வழங்கப் போவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி உறுதி பூண்டுள்ளார். இத்துறையில் 35 ஆண்டு கால அனுபவம் கொண்டுள்ள தமக்கு இந்தப் புதிய பொறுப்பு கடுமையானதாகவும் சவால்மிக்கதாகவும் இருக்கும் என்றார் அவர்.

“வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை எனது நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான முறையில் ஊழலைத் துடைத்தொழிக்க முயற்சி செய்வேன்” என்றார். பண விரயத்தைக் குறைக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எஸ்பிஆஎம் அதன் பங்கை ஆற்றுவதை தான் உறுதி செய்யவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

ஊழலைத் துடைத்தொழிப்பதில் நாட்டு மக்களும் ஆணையத்தின் பணியாளர்களும் தனக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவர் என்று அஸாம் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது இந்நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிற்கு அஸாம் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  இப்பதவிக்குத் தனது பெயரை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் பரிந்துரை செய்த பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினுக்கும் அவர் நன்றி கூறினார்.

“அதே வேளையில், இந்த ஆணையத்தின் 14ஆவது தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாக பங்காற்றிய லத்திபா கோயாவிற்கு ஆணையத்தின் சார்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார் அவர். இதற்கு முன்னர் , ஆணையத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த அஸாம், 1984ஆம் ஆண்டில் ஊழல் தடுப்பு நிறுவனத்தில் (பிபிஆர்) துணை புலனாய்வு துறை அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.அதன் பின்னர் புலன் விசாரணை அதிகாரி, உளவுத் துறை அதிகாரி, அரசு அதிகாரி எனப் பதவிகளை வகித்துள்ள இவர், பொது மக்களுக்கு ஊழல் பற்றிய விழிப்புணர்வு கல்வியையும் போதித்துள்ளார்.

மின்சார பொறியியல் துறையில் பட்டப் படிப்பு (யுஐடிஎம்), சட்டத்துறை இளங்கலை பட்டப்படிப்பு (மலாயா பல்கலைக்கழகம்), ஆசிய மின் – பல்கலைக்கழக பட்டப்படிப்பு ஆகியவற்றை மேற்கொண்டுள்ள இவர் எஸ்பிஆர்எம்மில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். தனது பரந்த அனுபவத்தின் காரணமாக உளவுத்துறை இயக்குநர் (2013), புலன் விசாரணை இயக்குநர் (2015( ,மற்றும் துணை தலைமை ஆணையர் (நடவடிக்கை பிரிவு) (2016) ஆகிய உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

இந்த பணி காலத்தின் போது அதிகப் பிரசித்தி பெற்ற 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இண்டெர்நேஷனல் வழக்குகளையும் விசாரணை செய்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் ‘சட்டவிரோத உரிமம்’ விவகாரம் அம்பலமானதில் இவரும் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த விசாரணையின் போது 100 தனிநபர்களை கறுப்புப் பட்டியலிட்டு கைது செய்த நடவடிக்கையிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதன் விளைவாக, வாகனமோட்டும் சோதனை நடைமுறை கணினி முறைக்கு இப்போது மாற்றப்பட்டது.


Pengarang :