SELANGOR

தாமான் ஸ்ரீ மூடா ஆலயத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் உதவிகள் வழங்கினார் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 18:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினருமான மாண்புமிகு கணபதி ராவ் இன்று சனிக்கிழமை காலை 9 மணி தொடங்கி தாமான் ஸ்ரீ மூடா மஹா மாரியம்மன் ஆலய வளாகத்தில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர் திரு யுகராஜா ஒத்துழைப்புடன் 70 பி40 வர்கத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

அது மட்டுமல்லாமல், சுமார் 300 குடும்பங்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உதவினார். கடந்த மார்ச் 18-இல் பிகேபி நடவடிக்கை ஆரம்பித்தது முதல் இன்று வரை மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் பொருட்களை வழங்கும் போது பேசுகையில், அரசியல் சித்தாந்தங்களை ஒரு புறம் தள்ளிவைத்து கோவிட்-19 நோய் பரவலால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிக்கு உண்டு என்பதை கணபதி ராவ் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு மாநகராட்சி மன்ற உறுப்பினருமான திரு ராயுடு, ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு குமரேசன், ரேலா படையினர் மற்றும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.


Pengarang :