NATIONAL

கோவிட்-19 நோய் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளது- முகமட் ஹாசான்

கோலா லம்பூர், மே 1:

கோவிட்-19 நோயின் தாக்கத்தினால் மக்களின் வாழ்க்கை முறையே மாறியிருப்பதால், அந்நோய் முடிவுக்கு வந்த பின்னர், வழக்கமான புதிய அணுகுமுறை எது என்பதை அரசு நிர்ணயிக்க வேண்டுமென அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார். இந்நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை புதிய பழக்க வழக்கத்தையே மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.இது புதிய வழக்க முறையாகும். ஆயினும், அது இப்போது அசாரணமான வழக்க நடைமுறையாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டார். நோன்பு மாதத்தில் கூட்டாகத் தொழுகையை நடத்த முடியவில்லை. குடும்ப உறுப்பினர் இறந்தால், அவருக்கு சமய ரீதியான சடங்கைச் செய்ய முடியவில்லை. முஸ்லிம்கள் இம்மாதத்தில் கூட்டாக ‘தராவே’ பிரார்த்தனையைச் செய்ய முடியவில்லை என்று தமது ஆதங்கத்தை அவர் வெளிப் படுத்தினார்.

இந்நிலையில், மக்கள் அனைவரின் ஒத்துழைப்பின் மூலமே கோவிட்-19 நோயை அழிக்க முடியும். இனி குடும்ப உறுப்பினர்கள் சுய உடல் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் அவசியத்தை உணர வேண்டும்.
சமூக இடைவெளி அன்றாட வழக்க நடைமுறையாக அனுசரிக்க வேண்டும். அது நமது சுதந்திரத்தை பறித்து விட்டது. பள்ளிகளை நடத்த முடியவில்லை, தொழிற்துறை முற்றாக முடங்கிவிட்டது. வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நோய் பரவாமல் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் அரசின் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். ஆயினும் நடமாட்டக் கட்டுப்பாடு மே மாதத்துக்குப் பின்னரும் தொடர்ந்தால், மக்கள் பொறுமை காக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

#தமிழ்மலர்


Pengarang :