புத்ராஜெயா, மே 24:
நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,245 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 60 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 53 உள்நாட்டு சம்பவங்களில் 44 நோயாளிகள் அந்நியர்கள் ஆகும். இன்று எந்த ஒரு மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 115-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.
இன்றைய நிலையில் 9 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 4 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 33 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,945 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 82.06 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.