NATIONAL

பள்ளித் தவணை நேரம் கட்டம் கட்டமாக நடத்தப்படும்- கல்வி அமைச்சர்

புத்ராஜெயா, ஜூன் 10:

மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது காலையில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பள்ளித் தவணை நேரம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டாக்டர் முஹமட் ரட்சி முஹமட் ஜிடின் அறிவித்திருக்கிறார். குறுகியக் காலத்தில், முதல் மற்றும் இரண்டாம் நிலையை உட்படுத்திய சரியான நேரம் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதிலும் இருக்கும் 2,440 பள்ளிகளில் 500,444 சோதனைக்கு அமரவிருக்கும் மாணவர்களை உட்படுத்தி ஜூன் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.

இதனிடையே, பள்ளிகள் பின்பற்ற வேண்டிய செயல்பாட்டு தரவிதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிச் செய்ய, கல்வி அமைச்சு பள்ளிகளில் திடீர் சோதனையை மேற்கொள்ளும் என்றும் டாக்டர் முஹமட் ரட்சி குறிப்பிட்டார். புத்ராஜெயாவில், இன்று, புதன்கிழமை பள்ளித் திறக்கப்படுவது குறித்து நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.


Pengarang :