NATIONAL

மேலவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

கோலாலம்பூர், செப் 2- மேலவையின் 14வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான இரண்டாவது  கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்தக் கூட்டத் தொடரின் முதல் அங்கமாக மேலவையின் 18வது சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. நடப்பு மேலவை தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் பதவி காலம் கடந்த ஜூன்  மாதம் 22 ஆம் தேதி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய நியமனச் சடங்கு நடைபெற்றது.

இதற்கான வாக்களிப்பு வாக்குச்சீட்டின் மூலம் நடத்தப்பட்டது. இதில் டான்ஸ்ரீ ராய்ஸ் 45 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்றொரு வேட்பாளரான முகமது முகமது யுஸ் மூடிக்கு 19 வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தல் முடிவுகளைத் துணை மேலவை தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ அப்துல்  ஹலிம் அப்துல் சமாட் அறிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதால் எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பத்துச் சட்ட மசோதாக்கள் மீது மக்களவை உறுப்பினர்கள் விவாதம் நடத்துவர்.

இந்த நிகழ்வில் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி, முகமது அப்பாண்டி முகமது, அகமது  யாஹ்யா, டத்தோ வீரா ஓத்மான் அஜிஸ் ஆகியோர் செனட்டர்களாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலுவின் புதல்வரான வேள்பாரி இந்தியச் சமூகத்தின் சாபத்தைப் பெற்ற மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறி மஇகாவினால் எண்பதாம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தவறான நிர்வாகத்தால் சிக்கிச் சிதறிப் போனது. இதில் பணம் போட்ட சுமார் அறுபதாயிரம் ஏழைப் பாட்டாளிகளுக்குச் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையில் போட்ட பணம் மட்டுமே திரும்பத் தரப்பட்டது. மைக்கா முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் போட்ட பணத்தைக் கண்ணில் பார்க்காமலே மாண்டு போனார்கள்.

நாட்டின் மூத்த தமிழ்ப் பத்திரிகையான  தமிழ் நேசனின் நிர்வாக இயக்குநராகவும் இவர் பதவி  வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1924ஆம் ஆண்டில் செட்டியார்களால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்த இந்த நாளேடு ஒரு தலைப்பட்சமான செய்திகளால் காலப்போக்கில் வாசகர்களின் ஆதரவை இழந்து

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டது. வாக்குறுதியளித்தபடி மூன்று மாதச் சம்பளத்தில் அரை மாதச் சம்பளம் இன்னும் தரப்படாதது மற்றும் கூட்டு சம்பள ஒப்பந்தப்படி இழப்பீடு வழங்கப்படாதது போன்ற பிரச்னைகளை முன்வைத்துச் சுமார் 40 தொழிலாளர்கள் இன்றளவும் போராடி வருகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

 

 


Pengarang :