NATIONAL

நீரை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் சுஹாகாம் வலியுறுத்து

கோலாலம்பூர், செப் 6- நீர் வளங்கள் மாசுபடுவதற்கு காரணமாக விளங்கும் தரப்பினருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும என்று மனித உரிமை அமைப்பான சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது.

ரவாங், சுங்கை கோங் ஆற்றில் அண்மையில் நிகழ்ந்த நீர் மாசுபாடு போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய நீர் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும் என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.

அங்குள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிப்பட்ட இரசாயன கலவை ஆற்றில் கலந்த காரணத்தால் நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டு 1,292 பகுதிகளில் கடந்த இரு தினங்களாக நீர் விநியோகம் தடைபட்டது.

அந்த சம்பவத்திற்கு காரணமான நிறுவனம் மீது சிலாங்கூர் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய சுஹாகாம், எனினும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 2006ஆம் ஆண்டின் நீர் சேவைத் தொழில்துறைத் திட்டம் மற்றும் 1974ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தரச் சட்டம் ஆகியவை முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறியது.

ஆற்று நீர் மாசுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொள்கையில் அது தொடர்பான சட்டங்கள் முழுமையாக கையாளப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆகவே அந்த சட்டங்கள் மீண்டும்  மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

சுத்தமான குடிநீரைப் பெறுவதில் இருக்கும் அடிப்படை மனித உரிமையை நிலை நாட்டுவதில் வர்த்தக ஸ்தாபனங்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.


Pengarang :