SELANGOR

கோம்பாக்கில் 120,000 முகக் கவசங்கள் விநியோகம்

கோம்பாக், செப் 11- கோம்பாக் வட்டாரத்திலும் 104 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடிய 120,000 முகக் கவசங்களை சிலாங்கூர் மாநில அரசு இன்று விநியோகம் செய்தது.

தங்கள் பிள்ளைகளுக்கு அன்றாடம் முகக் கவசங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இந்த முகக் கவசங்கள் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முகக் கவசம் அணிவது கட்டாயமாகப்பட்ட போது அதிக பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என யோசித்தோம். அவர்களுக்கு உண்டாகும் செலவுகளை குறைப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்தோம் என்றார் அவர்.

பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாங்கத்தின் கடப்பாட்டின் ஒரு பகுதியாகவும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறையை மாணவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

கோடம்பாக், ஸ்ரீ சியான்தான் மண்டபத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

ஷா ஆலம், ஜூப்ளி பேராக் மண்டபத்தில் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இலவச முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் சுகாதார கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :