SELANGOR

குறைந்த வருமானம் பெறுவோருக்காக வெ.10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உதவித் திட்டங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தகவல்

ஷா ஆலம், செப் 14- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் வகையில் பத்து லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களை சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பின்னர் வருமான பாதிப்பை பெரிதும் எதிர்நோக்கி வரும் அத்தரப்பினரை இலக்காக கொண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய முதல் கட்டத் திட்டத்தில் 1,160 சிறு வியாபாரிகளுக்கு தலா 400 வெள்ளி வழங்கப்பட்டது. இது தவிர, 5,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு சுமார் மூன்று லட்சம் வெள்ளி செலவில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பல திட்டங்களை ஒத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் நம்மிடம் இன்னும் நிதி ஒதுக்கீடு கைவசம் உள்ளது.  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சுகாதார மற்றும் சத்துணவுப் பொருள்கள் வாங்குவதற்காக 348,000 வெள்ளி செலவிட்டுள்ளோம் என்று அவர் மேலும் சொன்னார்.

இன்று ஊஜோங் பெர்மாத்தாங் வட்டாரத்தில் சுகாதார பாதுகாப்பு மற்றும் சத்துணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

 


Pengarang :