NATIONAL

உணவகங்கள், பல்நோக்கு கடைகள் பின்னிரவு 2.00 மணி வரை செயல்பட சிலாங்கூர் அரசு அனுமதி

ஷா ஆலம், செப் 14- சிலாங்கூரில உள்ள உணவகங்கள் மற்றும் பல்நோக்கு கடைகள் அதிகாலை 2.00 மணி வரை செயல்பட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மன்றம் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்புக்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மீட்சி நிலைக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான தருணம் வந்து விட்டது என்று அவர் சொன்னார்.

இருந்த போதிலும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப கூடல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உணவகங்கள், பல்நோக்கு கடைகள் உள்ளிட்ட வர்த்தக மையங்கள் பின்னிரவு 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த 10 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

 

 


Pengarang :