NATIONAL

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு வங்கித் திட்டத்தின் வழி உதவி

பத்து கேவ்ஸ், செப்- 11- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமான ரீதியாக பாதிக்கப்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு சிலாங்கூர் உணவு வங்கித் திட்டத்தின் வழி விரைவில் உதவி வழங்கப்படும்.

இந்த உணவு வங்கித் திட்டத்தின் வழி வழங்கப்படும் உதவி சரியான தரப்பினரை சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக அதன் அமலாக்கம் மீது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டம் மீது மேற்கொள்ளப்படும் ஆய்வு தற்போது இறுதிக் கட்டத்தில் உளளது. இந்த உணவு விநியோகத் திட்டம் முறையாக குறிப்பாக சரியான தரப்பினரை சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக செயலாக்க வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.

வருமான குறைவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இறைவன் அருளால் தேவையான உதவிகள் விரைவில் சென்றடைவதை உறுதி செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோம்பாக் வட்டாரப் பள்ளிகளுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் வருமான பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிலாங்கூர் அரசின் உணவு வங்கித் திட்டம் மறுஆய்வு செய்யப்படவுள்ளதாக மந்திரி புசார் கடந்த ஜூலை 30ஆம் தேதி அறிவித்திருந்தார்.

பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 2,000 ஏழை குடும்பங்களை இலக்காகக் கொண்ட இத்திட்டத்திற்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :