NATIONAL

ரவாங், சுங்கை கோங் ஆற்றை மாசுபடுத்தியதாக ஐவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப் 15-  ரவாங், சுங்கை கோங் ஆற்றில் அபாயகரமான பொருள்கள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் கனரக இயந்திர பழுது பார்ப்பு தொழிற்சாலை இயக்குநர்கள் நால்வர் உள்பட ஐவர் மீது செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

யிப் கோக் வாய் (வயது 53), யிப் கோக் முன் ( வயது 58), யிப் கோக் குய்ன் (வயது 70), யிப் கோக் வோங் (வயது 60) ஆகிய நான்கு சகோதரர்களும்  தொழிற்சாலை நிர்வாகியான வூ வூன் லியோங் (வயது 59) தங்களுக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

யிப் சீன செங் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் பட்டறையில் இருந்த அபாயகரமான கழிவு பொருள்களை சுங்கை கோங் ஆற்றை நோக்கி செல்லும் கால்வாயில் கொட்டியதன் மூலம் கீழறுப்பு செயலைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிரான முதல் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இம்மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ரவாங், கம்போங் சுங்கை டூவாவில் உள்ள தங்கள் தொழிற்சாலையில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 430 வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

அதே இடத்தில் அதே நேரத்தில் முறையான அனுமதியின்றி அபாயகரமான பொருள்களை அக்கால்வாயில் கலக்க விட்டதாக அந்த ஐவருக்கும் எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் வெள்ளி அபராதம், ஐந்தாண்டு வரையிலான சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின் 25(1) பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை செவிமடுத்த நீதிபதி ஷியாபிரா முகமது சைட்,  அந்த ஐவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததோடு வழக்கை அக்டோபர் மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 


Pengarang :