SELANGOR

இன்வெஸ்ட் சிலாங்கூர் புதிய தொழில் பேட்டைப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது

ஷா ஆலம், செப் 15- புதிய தொழில்பேட்டைகளை அமைப்பதற்கான இடங்களை இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் நிலத் தகுதியை மாற்றுவதற்கான நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகிறது.

கிள்ளான், கோல லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நிலங்கள் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸாரி இட்ரிஸ் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று முடிவுக்கு வந்து பொருளாதாரமும் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதால் புதிய முதலீடுகள் வருவதற்கான சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடுவதற்கான தருணம் வந்து விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

அடையாளம் காணப்பட்டுள்ள தொழில்பேட்டைப் பகுதிகள் விமான நிலையம் மற்றும் துறைமுக வசதிகளுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதால் தொழில்துறையினரின் தேவையை நிறைவேற்றும் ஆற்றலை அவை கொண்டிருப்பதாக டத்தோ ஹசான் சொன்னார்.

மலேசியாவின் முன்னணி வர்த்தக மையமாக சிலாங்கூரை பிரபலப் படுத்தும் நடவடிக்கைள் தொடர்ந்து  மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட சவால்களை கடந்தும் வாய்ப்புகளை தேடும் முயற்சிகள் தொடரப்படும் என்றார்.

 


Pengarang :