SELANGOR

“சித்தம்“ அமைப்பின் ஏற்பாட்டிலான திறன்  பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்கள் கௌரவிப்பு

ஷா ஆலம், செப் 16-  “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டிலான தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற எழுபது பேர் இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், இந்திய சமூகத் தலைவர்கள் அமைப்பின் தலைவர் ஆர்.ராஜேந்திரன், ஹிஜ்ரா சிலாங்கூர் வாரியத்தின் தலைவர் நோர் மைய்சா யாஹ்யா, சித்தம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.தீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யுபென் எனப்படும் சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் ஹிஜ்ரா சிலாங்கூர் வாரியம் ஆகியவற்றின் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு நிர்வகித்து வரும் சித்தம் அமைப்பு  தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, தொழில்திறன் பயிற்சி, வியாபார கருவிகளுக்கான நிதியுதவி மற்றும் குரோ எனப்படும சுய வழியில் வளம் காணும் திட்டம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்ட குரோ பயிற்சித் திட்டத்தில் 40 பங்கேற்ற வேளையில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 30 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் புகைப்படக் கலை, வெல்டிங் எனப்படும் பற்றவைப்பு தொழில், தையல் கலை, குளிர்சாதன பழுதுபார்ப்பு சிகையலங்காரம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய உடம்பு பிடி பயிற்சி ஆகிய துறைகளில் மூன்று மாத பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய  ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், தொழில்துறையில்  மாநில மக்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கான பல்வேறு திட்டங்களை தாங்கள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

இம்மாநிலத்திலுள்ள இந்திய தொழில்முனைவோர் தொழில்துறையில் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு சித்தம் போன்ற அமைப்புகள் சிறந்த தளமாக விளங்குவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 48 சமூகத் தலைவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


Pengarang :