NATIONAL

நெகிழிப்பை கட்டணம் மூலம் வெ. 11 லட்சம் வசூல்

ஷா ஆலம், செப் 22- வியாபார மையங்களில் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளுக்கு தலா 20 காசு கட்டணம் விதிக்கப்பட்டதன் மூலம் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 11 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் அரசு வசூலித்துள்ளது.

நெகிழிப்பைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தில் பங்கேற்றுள்ள பேரங்காடிகள் மற்றும் வர்த்தக மையங்களிடமிருந்து ஊராட்சி மன்றங்கள் இந்த கட்டணத்தை வசூல் செய்ததாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இந்த தொகை சிறப்பு நிதி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆற்றை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசார இயக்கங்களுக்கு பயன் படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

நெகிழிப்பைகளுக்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் 25 லட்சம் வெள்ளி முதல் 30 லட்சம் வெள்ளி வரை வசூலிக்க முடியும் என்று தாங்கள் எதிர் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக  ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பது தொடர்பான பிரசார இயக்கத்தை இங்குள்ள மாரா நிபுணத்துவ கல்லூரியில் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு ஏதுவாக நெகிழிப்பைகளின் பயனீட்டை குறைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

 


Pengarang :