SELANGOR

சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்க 8,000 பேர் பதிவு

ஷா ஆலம், செப் 30- வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி இங்கு நடைபெறவிருக்கும் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்பதற்கு  8,150 பேர் பதிவு செய்துள்ளனர்.

முகப்பிடங்களில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக விண்ணப்பதாரர்கள் கட்டங் கட்டமாக மண்டபத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பதற்கு ஏதுவாக ஒரு சமயத்தில் 400 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களின் உடல் உஷ்ணத்தை சோதிப்பது, கிருமி நாசினி தெளிப்பது மற்றும் முகக்கவசம் அணிந்திருப்பது போன்ற நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை  சுமூகமான முறையில் நடைபெறுவதையும் நிர்வாக நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக போலீசார் மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி நாடப்படும் என்றார் அவர்.

அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல்  டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த 2020 மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தையில் 24,500 வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் வரும் அக்டோபர் 3 மற்றும் 4ஆம்  தேதிகளில் நடைபெறும் வேலை வாய்ப்புச்  சந்தையில் சுமார் 15,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 


Pengarang :