SELANGOR

32 விழுக்காட்டு காடுகளை நிலை நிறுத்துவது உறுதி செய்யப்படும், சிலாங்கூர் அரசு திட்டவட்டம்

ஷா ஆலம், அக் 4- சிலாங்கூர் 32 விழுக்காட்டு காடுகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் இலக்கை நோக்கி சரியான தடத்தில் மாநில அரசு பயணிப்பதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

சிலாங்கூர் அரசின் 2035ஆம் ஆண்டு உள் கட்டமைப்பு திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி இந்த இலக்கு அடையப்படும் என்று அவர் சொன்னார்.
தற்போது மாநிலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 207.39 ஹெக்டர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளதாக தெரிவித்தார்.

இது தவிர்த்து 1985ஆம் ஆண்டு தேசிய நிலச்ச சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் நிரந்தர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆர்ஜிதம் செய்ய மேலும் 564.43 ஹெக்டர் நிலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியை நிலை நிறுத்துவதற்கும் அதிகரிப்பதற்கும் மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளதாக கூறிய அவர், மேம்பாட்டிற்காக வனப்பகுதி கையகப்படுத்தப்படும் போது அதே அளவு அல்லது கூடுதலான அளவு நிலத்தை மாற்றாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது என்றார் அவர்.

இத்தகைய நடவடிக்கையின் வழி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி குறையாமலிருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் ரீதியில் நீடித்த நிலைத்தன்மையையும் உறுதி செய்ய முடியும் என அவர் சொன்னார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கக் கூடிய வளர்ச்சியடைந்த மாநிலமான சிலாங்கூர் காடுகளைப் பாதுகாப்பதில் தனக்குள்ள கடப்பாட்டை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :