SELANGOR

வட கோல லங்காட் பகுதியில் மேம்பாட்டுத் திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு மாற்றாக 1,177 ஹெக்டர் நிலம்

கோல லங்காட், அக் 4- வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மேம்படுத்தும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதற்கு மாற்றாக 1,177.31 ஹெக்டர் பகுதியை மாநில அரசு தயார் படுத்தும்.

சபாக் பெர்ணமில் உள்ள 308.6 ஹெக்டர் சுங்கை பாஞ்சாங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, 606.8 ஹெக்டர் சபாக் பெர்ணம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் உலு சிலாங்கூரில் உள்ள அம்பாங் பெச்சா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகியவையே அந்த மாற்று வனப்பகுதிகளாகும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

இந்த மூன்று இடங்களையும் மாற்று நிரந்தர வனப்பகுதிகளாக பயன்படுத்துவதற்கு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி  நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.

இது தவிர, அம்பாங் பெச்சா பகுதியில் உள்ள மேலும் 190.2 ஹெக்டர் பகுதியை மாற்று வனப்பகுதியாக அறிவிப்பது குறித்தும் மாநில அரச ஆலோசித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோல லங்காட் மாவட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக அங்குள்ள உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக கேரித் தீவில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான ஆட்சேபங்களை ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக மாநில அரசு எப்போதும் வெளிப்படையான கோட்பாடுகளை கடைபிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை செவிமடுப்பதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த தளத்தை முறையாகப் பயன்படுத்தி விவேகத்துடனும் நிபுணத்துவத்துடனும் தங்களின் கருத்துக்களை முன்வைப்பர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர்  சொன்னார்.

சுமார் 7,247 ஹெக்டரை உள்ளடக்கிய இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கடந்த  1927ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சுற்றியுள்ளப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 957.6 ஹெக்டர் நிலம் மட்டுமே காடுகளைக் கொண்டுள்ளது.

 


Pengarang :