SELANGOR

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பொறுப்புகள் மறுசீரமைப்பு

ஷா ஆலம், அக் 7- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பொறுப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 17ஆம் தேதி புர்ஹான் அமான் ஷா மற்றும் முகமது ஜவாவி அகமது முக்னி ஆகிய இருவரும் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்புத் தேவைக்கேற்ப ஆட்சிக்குழுவில் ஐந்து புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தாக்க கலாசாரம் & ஸ்மார்ட் சிலாங்கூர் , பேரிடர் நிர்வாகம், தொழிலாளர் ஆற்றல், ஒற்றுமை மற்றும் ஹலால் தொழில்துறை ஆகியவையே அந்த ஐந்து புதிய துறைகளாகும்.

இந்த ஆட்சிக்குழு நியமனம் இன்று அக்டோபர் 7ஆம் தேதி அமலுக்கு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மறுசீரமைப்பு சிலாங்கூர் மாநில மக்கள் அனைவருக்கும் நன்மையைக் கொண்டு வரும் என்பதோடு அர்ப்பணிப்புடன் கூடிய சேவையின் வாயிலாக வளர்ச்சியடைந்த மாநிலமாக சிலாங்கூரை மாற்றும் கனவையும்  நனவாக்க முடியும் என்று அவர் சொன்னார்.

கூடுதலாக உருவாக்கப்பட்ட புத்தாக்க கலாசாரம் & ஸ்மார்ட் சிலாங்கூர், பேரிடர் நிர்வாகம் ஆகிய இரு துறைகளை மந்திரி புசார் தன் வசம் வைத்திருப்பார்.

முன்பு வீடமைப்பு & நகர்ப்புற வாழ்க்கை மற்றும் பொது சுகாதாரத்திற்கான ஆட்சிக்குழு என அழைக்கப்பட்டத் துறை வீடமைப்பு— நகர்புற நல்வாழ்வுத் துறை இனி அழைக்கப்படும்.

புற நகர் & பாரம்பரிய கிராம மேம்பாடு, மலாய் மரபு, கலாசாரம் & பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக புர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய சமய விவகாரங்கள், பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில்துறைக்கான பொறுப்பு முகமது ஜவாவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் மூன்று ஆட்சிக்குழுக்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீடமைப்பு, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக ரோட்சியா இஸ்மாயில்  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹி லோய் சியான் சுற்றுலா, சுற்றுச்சூழல் & பசுமை தொழில்நுட்பம் மற்றும் பூர்வக்குடியினர் விவகாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினராகவும் வீ.கணபதிராவ் சமூக பொருளாதாரம் சமூக நலன், தொழிலாளர் ஆற்றல்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

டாக்டர் சித்தி மரியா பொது சுகாதாரம் எனும் புதிய பெயருடன் அதே பொறுப்புகளை தொடர்ந்து வகித்து வருவார். இதர நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய நிலையிலான அரசியலில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டத்தோ அப்துல் ரஷிட் அசாரி மற்றும் ஹனிசா தல்ஹா ஆகிய இருவரும் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்றாக புர்ஹான் மற்றும் முகமது ஜவாவியின் நியமனமும் ஆட்சிக்குழு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :