NATIONALSELANGOR

கிள்ளானில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வெள்ளிக்கிழமை அமல்

ஷா ஆலம், அக் 7- கிள்ளான் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை  நள்ளிரவு மணி 12.01 தொடங்கி நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப் படவுள்ளது.

கிள்ளானில் 40க்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கிள்ளான் தவிர்த்து சபா மாநிலத்தில் சண்டகான், பாப்பார் ஆகிய பகுதிகளிலும் இந்த நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இம்மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த 14 நாள் காலக்கட்டத்தில் நோய் கண்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த நான்கு பகுதிகளுக்கும் செல்லவோ வெளியேறவோ பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நோய் தொடர்பில் 77 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைத் தொடர்ந்து இம்மாவட்டம் சிவப்பு மண்டலமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு

– வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்க இருவர் மட்டுமே வெளியேற முடியும்.

– சேவை அடிப்படையில் அல்லாத வர்த்தகங்கள்  மூடப்பட வேண்டும்.

– உணவகங்கள், மளிகைக் கடைகள், பலசரக்கு கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

– உணவுகளை வாங்கி மட்டும் செல்லவும் டிரைவ் த்ரு எனப்படும் வாகனங்களுக்கான முகப்பிட உணவு விநியோக சேவை மற்றும்  வீடுகளுக்கான உணவு விநியோகச் சேவையை பயன்படுத்த வேண்டும்.

– பெட்ரோல் நிலையங்கள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்படும்.

– காய்கறி சந்தைகள் காலை 6.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக் கப்படும்.

– பாசார் மாலாம், பாசார், மொத்த வியாபார சந்தை, பாசார் தானி செயல்பட அனுமதிக்கப்படாது.

– கிளினிக், அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படும்.

– பொருள்களை ஏற்றும் வாகனங்கள்  இப்பகுதிக்கு வந்து செல்ல முன்கூட்டியே போலீஸ் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

– மருந்தகங்கள் மற்றும் மருந்துக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

– டாக்சி  மற்றும்  வாடகை கார் (கூடின பட்சம் இரு பயணிகள்) சேவையும் உணவு விநியோகச் சேவையும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

– விரைவு பஸ் உள்பட அனைத்து பஸ் சேவையும் நிறுத்தப்படும்.

– அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்கும் பட்சத்தில் அவசர வேளைகளில் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

– இந்த கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இப்பகுதி மக்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

– முதலாளிகள் இந்த நிபந்தனையை பின்பற்றி நடக்க வேண்டும் என்பதோடு தங்கள் தொழிலாளர்கள் வீட்டிலேயே இருக்கவும் அல்லது வீட்டிலிருந்தவாறு வேலை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

– அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும் என்பதோடு சமூக, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.


Pengarang :