NATIONALPENDIDIKAN

மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அக். 9 முதல் வீடு திரும்ப அனுமதி

கோலாலம்பூர், அக் 7- வரும் 2020/2021 கல்வியாண்டில் இணைந்துள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் மாணவர்களும் முதலாவது மத்திய தவணைக்கான விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 9ஆம் தேதி முதல் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.

கெடா, கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களிலுள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் மாணவர்களும் வரும் 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வீடு திரும்ப அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறையின் பள்ளிகள் நடவடிக்கை பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் அட்ஸ்மான் தாலிப் கூறினார்.

இதர மாநிலங்களைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் மாணவர்கள் வரும் 10ஆம் தேதி முதல் 18ஆம்  தேதி வரை வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்று அவர் மேலும் சொன்னார்.

வரும் 9ஆம் தேதி முதல் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்காக கல்லூரிக்கு வரலாம். எனினும், இந்த நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஆயினும், சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.

ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் புதிய இயல்புக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :