NATIONALSELANGOR

தொடர்புத் துறையை வலுப்படுத்த சிலாங்கூர் அரசு-தொடர்பு பல்லூடக ஆணையம் பேச்சு வார்த்தை

ஷா ஆலம், நவ 17- தொடர்பு சேவைத் துறையை வலுப்படுத்துவது தொடர்பில் சிலாங்கூர் அரசு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.

மக்கள் உரிய பலனை பெறுவதை உறுதி செய்யவும் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக மாற்றும் திட்டத்திற்கேற்பவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 
அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தை இலக்கவியல் மயமாக்கும் நடவடிக்கைக்
கேற்பவும் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மந்திரி புசார் இந்த தகவலை வெளியிட்டார்.

முன்னதாக அவர் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் தலைவர் 
டாக்டர் பாட்ஹூல்லா சுஹாய்மி அப்துல்லாவை தமது அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜெண்டேலா எனப்படும் தேசிய இலக்கவியல் ஒருங்கமைப்பு திட்டம் குறித்து மந்திரி புசாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

விவேக மாநிலத் திட்டம் மற்றும் இலக்கவியல் மயம் ஆகியவற்றின் அமலாக்கத்திற்காக சிலாங்கூர் அரசு அடுத்தாண்டிற்கான தனது வரவு செலவுத் திட்டத்தில் 36.9 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

Pengarang :