SELANGORYB ACTIVITIES

ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தை பயன்படுத்தி கொள்வீர்- இளம் தொழில் முனைவோருக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், நவ 19- வர்த்தகத்தில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் ஹிஜ்ரா வாரியத்தின் கடனுதவி திட்டத்தில் பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவோருக்கு உதவுவதிலும் மாநில அரசு உரிய கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக மாநில அரசின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

பொருளாதார மேம்பாட்டில் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை உடனடியாக பற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஹிஜ்ரா தொழில் முனைவோர் கடனுதவி திட்டத்திற்கு ஒன்றரை கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு வழங்கும் இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கைருடின் மேலும் சொன்னார்.

இதுவரை ஹிஜ்ரா திட்டத்தின் மூலம் 53, 958 பேர் 51 கோடியே 70 வெள்ளியை வர்த்தக கடனுதவியாக பெற்றுள்ளனர்.


Pengarang :