ECONOMYNATIONALSMART SELANGOR

மலேசியாவில் கட்சி தாவல் “அரசியல் கொள்ளைநோயை” சமாளிக்கக் கடும் சட்டம் தேவை

கோலாலம்பூர், டிச.10: நாட்டில் கட்சி தாவல் என்ற ஒரு “அரசியல் கொள்ளைநோயை” எதிர்த்துச் சமாளிக்கக் கட்சி தாவலுக்கு எதிரான கடும் சட்டத்தை மலேசியா இயற்ற வேண்டும் என்று மலேசிய ஊழல் மோசடிகளை ஆய்ந்து கண்டறியும் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ  அக்பர் சத்தார் கூறினார்.

நாடாளுமன்ற மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல்கள் இனியும் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. அது நாட்டுக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும்  பெரிய சவாலாக மாறி வருகிறது, அதனால் ஒரு  அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைத்து விடுவதுடன், மக்களின் வாழ்வையும் பாதிப்புக்குள்ளாக்கிறது என்றார் அவர். .

மேலும், கட்சித்தாவல்கள் ஊழலுக்கு வழிவகுப்பதுடன்,  நாணயமற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றித் துரோகச் செயல்களைச் செய்வதைக் கூட எளிதில் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயமாக மலேசியர்களை அடையாளப்படுத்துவதாக இருப்பதாக அஸ்ட்ரோ அவானி செய்தி அலைக்கு அளித்த பேட்டி ஒன்றில், குறிப்பிட்டார்.

நாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவப் பணமும், பதவிகளும் காரணமாக உள்ளன. அதே வேளையில் ஒரு ஆளும் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதுடன், ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் மேற்கொள்ளும் திட்டங்களும் தவிடுப் பொடியாகின்றன என்று அவர் கூறினார்.

டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் (TI) நடத்திய “உலகளாவிய ஊழலுக்கான அளவுகோல்  2020”  ஆய்வில் சட்டமியற்றுபவர்களாக நாம் மதிக்கும் நாடாளுமன்றச் சட்டமன்ற உறுப்பினர்களே ஊழலுக்கு மிக எளிதில் வயப்படுபவர்களாக இருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.

கட்சித்தாவல் ஊழல், பொய், புரட்டல்களுடன் தொடர்புபடுத்தி “அரசியல்வாதிகளைப் பார்த்தால் அவர்கள் மிகக் கேவலமாகவே தெரிவார்கள். ஒரு சமுதாயமே தங்கள் தலைவர்களைக் கேவலமாக எண்ணிப் பழகிவிட்ட நிலையில் அவர் மீது  இளம் தலைமுறைக்கு எப்படி மதிப்பு வரும்? மரியாதை ஏற்படும் என்று சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை முன்னிட்டு அஸ்ட்ரோ அவாணிக்கு பேட்டியளித்த அவர் கேட்டார்.


Pengarang :