NATIONAL

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் 327 போலீசார் கைது

கோலாலம்பூர், டிச 28- போதைப் பொருளை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் உயர் அதிகாரிகள் உள்பட 327 போலீஸ்காரர்களை அரச மலேசிய போலீஸ் படை கைது செய்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் டூரி  நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ ரசாருடின் ஹூசேன் கூறினார்.

உளவுத் தகவல்கள் மற்றும் புகார்களின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இத்தகைய குற்றங்களுக்காக கடந்தாண்டில் 566 பேர் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், போலீஸ் துறையில் போதைப் பழக்கம் இவ்வாண்டு குறைந்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்றார்.

போதைப் பொருளை வைத்திருந்தது, விநியோகம் செய்தது, சிறுநீர் சோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது மற்றும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் பேரில் அவர்கள் கை து செய்யப்பட்டனர் என்றார் அவர்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் போதைப் பொருளை தவறாக பயன்படுத்தும் பழக்கத்தை தடுப்பதற்காக முன்பு ஓப்ஸ் புளு டெவில் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தோம். தற்போது ஓப்ஸ் டூரி என்ற பெயரில் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக 18 பேரும் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக 74 பேரும்  போதைப் பொருளை பயன்படுத்தியதற்காக 225 பேரும் கைது செய்யப்பட்ட வேளையில் மேலும் பத்து பேர் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளில் பிடிபட்டனர் என அவர்  சொன்னார்.

கடந்தாண்டில் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக 40 பேரும் போதைப் பொருளை வைத்திருந்த தற்காக 99 பேரும்  போதைப் பொருளை பயன்படுத்தியதற்காக 424 பேரும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.


Pengarang :