பூச்சோங், ஜன 2– பூச்சோங் 14வது மைல் சுகாதார மையத்தில் புதிதாக கார் நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 45 கார்களை நிறுத்துவதற்குரிய வசதியை இந்த கார் நிறுத்துமிடம் கொண்டுள்ளது.
சுமார் 144,000 வெள்ளி செலவிலான இந்த கார் நிறுத்துமிடத் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் முழுமையடைந்ததாக புதுக்கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
சுகாதார மையத்திற்கு வருவோர் இதுநாள் வரை எதிர்நோக்கி வந்த கார் நிறுத்துமிடப் பிரச்னைக்கு இதன் வழி தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
போதுமான கார் நிறுத்துமிடங்கள் இல்லாத காரணத்தால் இந்த சுகாதார மையத்திற்கு வருவோர் இதுநாள் வரை தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வந்தனர். இது போக்குரத்துக்கு இடையூறாகவும் சாலையை பயன்படுத்துவோருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு காலியாக இருந்த நிலத்தில் கார் நிறுத்துமிடத்தை அமைக்கும் முடிவை எடுத்தோம் என்றார் அவர்.
இந்த கார் நிறுத்தத்தை இலகு ரக வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் எனக் கூறிய அவர், இதற்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்றார்.