NATIONAL

தொற்றுநோய் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா சட்டத் துறை தலைவர் அலுவலகத்திடம் தாக்கல்- சுகாதார அமைச்சு தகவல்

கோத்தா பாரு, பிப் 2– 1988ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 342வது பிரிவில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த 1988ஆம் ஆண்டில்  இயற்றப்பட்ட அந்த 342வது சட்டப்பிரிவை நடப்புத் தேவைக்கேற்ப மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அச்சட்டப் பிரிவின் கீழ் ஆயிரம் வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகப்பட்ச அபராதத் தொகை உள்பட பல்வேறு ஷரத்துகளில் திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத் திருத்தத்தை செய்வதற்கு நடப்பிலுள்ள அவசர காலத்தை நாம் பயன்படுத்தவிருக்கிறோம் என்று இங்குள்ள கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி. நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோருக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையை அதிகரிப்பதற்கான தருணம் வந்து விட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறியிருந்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கால எஸ்.ஓ.பி. விதிமுறைகளை பின்பற்றத் தவறிய காரணத்திற்காக குறிப்பாக கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியதற்காக வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 


Pengarang :