சீனப்புத்தாண்டை முன்னிட்ட பேறு குறைந்த 100 பேருக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உதவி

ஷா ஆலம், பிப் 11– சீனப்புத்தாண்டை முன்னிட்டு சமூக மையங்களில் தங்கியிருக்கும் பேறு குறைந்த 100 மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்களுக்கு ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் உதவிப் பொருள்களை வழங்கியது.

நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இந்த உதவிப் பொருள்களை தாங்கள் வழங்கியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்பு மற்றும் வர்த்தகப் பிரிவுத் தலைவர் எலினா பாசேரி கூறினார்.

காஜாங், லவ் அண்ட் கேர் பராமரிப்பு மையம், தாமான் பெர்ன் கார்டன், ரெய்ன்போ ஹோம், தாமான் கிள்ளான் ஜெயா பெர்க்காட் காசே ஆதரவற்றோர் இல்லம் ஆகிய மையங்களின் பிரதிநிதிகளிடம்  உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

லவ் அண்ட் கேர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருள்களோடு தளவாடப் பொருள்கள் மற்றும் பயிர் செய்வதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன என்றார் அவர்.

அந்த மையத்தில் குடியிருக்கும் 30 முதியோரின் வசதிக்காக குழாய்களைப் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு பூச்சுக் கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மற்ற மையங்களில் தங்கியிருக்கும் 70 சிறார்களுக்கு பெருநாளன்று சமைப்பதற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் படிப்பதற்கு ஏதுவாக மேசை, நாற்காலி மற்றும் அலமாரி, சோபா போன்ற தளவாடங்களும் வழங்கப்பட்டன என்றும் எலினா குறிப்பிட்டார்.


Pengarang :