NATIONAL

சீனப்புத்தாண்டின் போது சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு இருக்காது- காவல் துறை கணிப்பு

கோலாலம்பூர், பிப் 12– சீனப்புத்தாண்டு விடுமுறையின் போது நாடு முழுவதும் உள்ள சாலைகளில் பெரிய அளவில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு இருக்காது என காவல் துறையினர் கருதுகின்றனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான தடை இன்னும் அமலில் உள்ளதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதற்கான சாத்தியம் இல்லை என்று புக்கிட் அமான்  சாலை போக்குவரத்து மற்றும் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ அஜிஸ்மான் அலியாஸ் கூறினார்.

ஒரு வேளை சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தாலும் சில்லறை வணிகம் சார்ந்த துறைகளுக்கு அண்மையில் வழங்கப்பட்ட எல்லை கடக்கும் அனுமதி அதற்கு காரணமாக அமையலாம் என அவர் சொன்னார்.

மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடக்க முயல்வோர் மீது 1988ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பெருநாள் காலத்தின் போது சாலை தடுப்பு உள்பட இதர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமான போலீஸ்காரர்கள் உள்ளதால் காவல் துறை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று அவர் கூறினார்.

நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்க மோட்டார் சைக்கிள் மற்றும் ரோந்து வாகனக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :