அரசு நிறுவனங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்துவீர்- பக்கத்தான் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 6- அரசு நிறுவனங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளும்படி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசிய கூட்டணியை பக்கத்தான் ஹராப்பான் வலியுறுத்தியுள்ளது.

சிறுபான்மை அரசாங்கமான பெரிக்காத்தான் நேஷனல் தனது ஆதரவை பெருக்கிக் கொள்வதற்கு இத்தகைய செயல்களில்  ஈடுபடக் கூடாது என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்நாட்டில் அரசியல் களம் ஆரோக்கியமானதாகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப ஜனநாயக அடிப்படையில் இயங்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு தெரிவிப்பதை உறுதி செய்வதற்காக அரசியல் ரீதியான நெருக்குதல்கள் தரப்படுவதை தாங்கள் அறிந்துள்ளதாக அந்த எதிர்க் கட்சி கூட்டணி கூறியது.

சட்ட ரீதியாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் கொள்கை ரீதியாக வரவேற்கிறோம். ஆனால், அரசியல் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கும் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதற்கும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைவர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


Pengarang :