SELANGORYB ACTIVITIES

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் தடுப்பூசியைப் பெறுவர்-மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 8- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வாரம் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

அடுத்தக் கட்ட தடுப்பூசி திட்டங்களை மேற்கொள்வதில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவுள்ளதால் அவர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடப்படுவதாக அவர் சொன்னார்.

நேரப் பற்றாக்குறை காரணமாக கடந்த வாரம் ஆட்சிக்குழு உறுப்பினகளுடன் அவர்களால் தடுப்பூசியைப் பெற இயலவில்லை. ஆகவே, ஒரு வார காலத்திற்குள் சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட சுகாதார மையங்களில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்திற்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இங்குள்ள கவ் ஒங் யா சீன ஆலயத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக அவர், சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காக புக்கிட் அந்தாரா பங்சா தொகுதியிலுள்ள எட்டு சீன ஆலயங்களுக்கு தலா ஆயிரம் வெள்ளிக்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு அவர் உணவுக் கூடைகளையும் வழங்கினார்.


Pengarang :