NATIONALSELANGOR

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையமாக சுபாங் ஜெயா மருத்துவ மையம் செயல்படும்

கோலாலம்பூர், மார்ச் 10- பெட்டாலிங் ஜெயா மாவட்டத்திற்கான கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையமாக சுபாங் ஜெயா மருத்துவ மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்தை செவ்வனே மேற்கொள்ளவதற்கு தேவையான  பயிற்சி பெற்ற பணியாளர்களைத் தாங்கள் கொண்டுள்ளதாக சுபாங் ஜெயா மருத்துவ மையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி திரிஷ் ஹோகன் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நாளை முதல் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதில் தனியார் மற்றும் அரசாங்கத் துறைக்குமிடையிலான ஒத்துழைப்பு மிக அவசியம் என்று அவர் சொன்னார்.

நாட்டிலுள்ள 80 விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு  ஒத்துழைப்பு வழங்குவதில் சுபாங் ஜெயா மருத்துவ மையம் முழு கடப்பாடு கொண்டுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியின் மூலம் நேர்மறையான விளைவுகளை நாம் பெற முடியும் என்றார் அவர்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் ஈடுபடுத்தப்படும் என்று  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர்  கைரி ஜமாலுடின் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :