NATIONAL

10,000  வெள்ளி அபராதத் தொகையைக் குறைக்க மாவட்ட சுகாதார அலுவலகங்களில் முறையீடு செய்யலாம்- அமைச்சர் ஆலோசனை

அலோர்ஸ்டார், மார்ச் 13– கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அந்த அபராதத் தொகையைக் குறைப்பதற்கு மாவட்ட சுகாதார அலுவலங்களில் முறையீடு செய்யலாம்.

மாவட்ட சுகாதார அலுவலங்களின் விவேகத்திற்குட்பட்டு செலுத்த வேண்டிய அபாராதத் தொகையின் அளவு நிர்ணயிக்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அபராதத் தொகையைக் குறைப்பதற்கான மேல் முறையீட்டை மாவட்ட சுகாதார அலுவலங்களில் மட்டும் செய்ய முடியுமே தவிர போலீஸ் நிலையங்களில் அல்ல. ஏனென்றால் இக்குற்றங்கள் 1988ஆம் ஆண்டு (சட்டம் 342) தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவையாகும் என்றார் அவர்.

‘அபராதத் தொகையை செலுத்தும் போது மேல் முறையீடு செய்யுங்கள். சுகாதார அதிகாரி நிச்சயம் அபராத த் தொகையைக் குறைப்பார் என நம்புகிறேன்‘ என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் அமலாக்க காலத்தில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பத்தாயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுவது தொடர்பில் கருத்துரைத்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தொடர்ந்து மீறுவோருக்கு மட்டுமே பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட படோர் கூறியுள்ளதையும் இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.

போலீசார் குற்றப்பதிவை வெளியிடும் போது அதன் தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகப் பட்ச தொகையை மட்டும் குறிப்பிட முடியுமே தவிர அதில் மாற்றம் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் விளக்கினார்.


Pengarang :