SELANGORSENISUKANKINI

சிலாங்கூர் சுக்மா போட்டி பங்கேற்பாளர்கள் முழு அளவிலான பயிற்சியைத் தொடக்கினர்

ஷா ஆலம், மார்ச் 20– சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் முழு அளவிலான பயிற்சியைத்  தொடக்கியுள்ளனர். எனினும், கடுமையான நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றி அந்த பயிற்சிகளை மேற்கொள்ள அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி மையங்களில் கோவிட்-19 நோய்த் தொற்று உண்டாவதைத் தடுப்பதற்காக தங்களின் வழக்கமான பயிற்சியில் சில மாறுதல்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூடி கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் கட்டொழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு பயிற்சி மையங்களில் எப்போதும் சுத்தத்தை பேணி காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மலேசிய லீக் கிண்ண கால்பந்து, மலேசிய ஹாக்கி லீக் மற்றும் செப்பாக் தக்ராவ் லீக் குழுக்கள் பயிற்சிகளை மேற்கொள்ள தேசிய  பாதுகாப்பு மன்றம் கடந்த மாதம் 9ஆம் தேதி அனுமதி வழங்கியது. எனினும், பயிற்சி மைங்களில் அல்லது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விளையாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியிருந்தது.

கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 நோய்த் தாக்கம் அதிகரித்த காரணத்தால் தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த 28 விளையாட்டுகளில் பங்கேற்கும் 600 விளையாட்டாளர்கள் இனி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மைய பயிற்சிகளில் பங்கேற்கலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிஸா மரைக்கான் நைனா மரைக்கான் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :