NATIONAL

18 வயதில் வாக்குரிமை பேரணியில் பங்கேற்றவர்கள் விசாரணைக்கு அழைப்பு- அன்வார் கவலை

ஷா ஆலம், மார்ச் 31- நாடாளுமன்றக் கட்டிடத்தின் எதிரே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 18 வயதில் வாக்குரிமை பேரணியில் பங்கேற்றவர்களை விசாரணைக்கு அழைத்துள்ள போலீசாரின் நடவடிக்கை அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஒ.பி.) பேரணியில் பங்கேற்றவர்கள் மீறியதாக எந்த தகவலும் பெறப்படவில்லை என்று அவர் சொன்னார்.

அந்த பேரணியில் பங்கேற்றவர்களில் சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் அது வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று ஜனநாயகத்தின் ஆரோக்கியம் உள்பட அனைத்து அமைப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தயுள்ளது என்றும் அவர்  கூறினார்.

பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கோரி இயக்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தின் எதிரே அமைதிப் பேரணியை நடத்தினர்.

வாக்களிப்பதற்கான வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்றும் இயல்பாக வாக்காளராகும் நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் அந்த பேரணியில் வலியுறுத்தினர்.


Pengarang :