PENDIDIKANSELANGOR

மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதில் சிலாங்கூர் முன்னணி

ஷா ஆலம், ஏப் 1– இடைநிலைப்பள்ளி தொடங்கி உயர்கல்விக்கூடம் வரை சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் மாநிலங்களில் ஒன்றாக சிலாங்கூர்  விளங்குகிறது.

‘ஒன்றாய் உயர்வோம்‘ என்ற சுலோகத்திற்கு ஏற்ப குறைந்த வருமானம் பெறுவோர் உள்பட அனைத்து நிலையிலான மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்பு பட்டப்படிப்பு மற்றும் முனைவர் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிலையை மாற்றி இடைநிலைப்பள்ளி மாணவர்களும் உபகாரச் சம்பளம் பெறுவதற்குரிய ஏற்பாட்டை செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவதன் மூலம் எதிர்காலத் தலைவர்களையும் அரசு நிறுவனங்களில் உயர்பதவி வகிக்கக்கூடியவர்களையும் உருவாக்க முடியும் என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில்  நடைபெற்ற பித்தாரா எனப்படும் சிலாங்கூர் உபகாரச்சம்பளம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பித்தாரா உபகாரச் சம்பளமாக 11 லட்சம் வெள்ளியும் சிலாங்கூர் மந்திரி புசார் சிறப்பு உபகாரச் சம்பளமாக 450,000 வெள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


Pengarang :