ECONOMY

சிப்பாங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  92,000 வெள்ளி உதவித் தொகை- மந்திரி புசார் ஒப்படைத்தார் 

சிப்பாங், ஏப் 27– பண்டார் சாலாக் திங்கி பகுதியில் கடந் மார்ச்  மாதம் ஏற்பட்ட கடும் புயலுடன்  கூடிய அடை மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிலாங்கூர் அரசு 92,000 வெள்ளியை நிவாரண நிதியாக வழங்கியது.

அந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட 184 குடும்பங்களின் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில் குடும்பத்திற்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியில்  உதவும் என்பதோடு சேதமடைந்த வீடுகளைச்  சரி செய்வதிலும் ஓரளவு துணை புரியும் என்று அவர் சொன்னார்.

சிப்பாங், தாமான் செரோஜா பாலாய் ராயாவில் நடைபெற்ற பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த புயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட டாலியா அடுக்குமாடி குடியிருப்பின் மூன்று புளோக்குகளில் கூரைகளைச் சரி செய்ய மாநில அரசு 416,000 வெள்ளியைச் செலவிட்டதாகவும் அவர்  சொன்னார்.

கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட அந்த கடும் புயல் மழையில் பண்டார் பாரு சாலாக் திங்கி மற்றும் பெக்கான் சாலாக் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 100 வீடுகள் சேதமடைந்தன.


Pengarang :