ECONOMYNATIONALPENDIDIKAN

மாணவர்களுக்கு மடிக் கணினிகளை விரைந்து வழங்குவீர்- பக்கத்தான் வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 27-  மடிக்கணினி தேவைப்படும் மாணவர்களுக்கு அந்த உபகரணத்தை விரைந்து வழங்கும்படி  கல்வியமைச்சை பக்கத்தான் ஹராப்பான எதிர்க்கட்சி கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் கற்பதித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தப்படி மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கூட்டணியின் கல்விக் குழு கூறியது.

வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளை எவ்வளவு காலத்திற்கு அமல்படுத்தினாலும் தேவைப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதன் மூலமே இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய முடியும் என அக்குழு கூறியது.

கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. எனினும் இத்திட்டத்தை அமல் செய்யும் போது மடிக்கணினி உள்பட அடிப்படை வசதி இல்லாத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்தித் தருவது  இன்றியமையாததாகும் என்று அறிக்கை ஒன்றில் அக்குழு வலியுறுத்தியது.

அந்த அறிக்கையில்  பக்கத்தான் கல்விக் குழுத்  தலைவர் டாக்டர் மஸ்லி மாலேக்,  நிக் நஸ்மி நிக் அகமது,  தியோ நீ சிங் மற்றும் டத்தோ டாக்டர் ஹசான் பகாரும் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நோன்பு பெருநாள் முடிந்தவுடன் வரும் மே மாதம் 16ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு நேற்று கூறியிருந்தது.

 


Pengarang :