சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய தன்னார்வலர் குழு- சிலாங்கூர் அரசு அமைத்தது

ஷா ஆலம், ஆக 6– சுகாதாரம் தொடர்பான விவகாரங்களை குறிப்பாக கோவிட்-1 தொற்றைக் கையாள சிலாங்கூர் மாநில அரசு தன்னார்வலர்  அமைப்பை உருவாக்கியுள்ளது.

“சுக்கா“ எனப்படும் அந்த சமூக தன்னார்வலர் அமைப்பில் 18 வயதுக்கும் மேற்பட்ட ஆரோக்கியமான உடல் நிலையைக் கொண்டவர்கள் பங்கேற்கலாம் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தேர்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்டு மாநிலத்திலுள்ள அனைத்து  56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேவையாற்ற அனுப்பப்படுவர் என்று அவர் சொன்னார்.

அந்த தன்னார்வலர்களுக்கு நோயாளிகளை கவனிப்பது, வீடுகளில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான கோவிட்-19 சுய மதிப்பீட்டு கருவிகளை செலங்கா செயலி வழி பயன்படுத்தும் வழிமுறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு “சிப்ஸ்“ எனப்படும் பெடுலி சேஹாட் காப்புறுதி திட்டத்தின் வழி அனுகூலங்களோடு தன்னார்லர்களுக்கான உபகரணப் பெட்டியும் வழங்கப்படும். இது தவிர, அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் இலவச பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த தன்னார்வலர் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/SUKA2021  எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். மேல் விபரங்களுக்கு [email protected]  எனும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :